நாகப்ப முதலியார் - அ (19- நா.)
சோழவளரநாட்டில் திருத்தில்லைக்கு அண்மையிலுள்ள பெரு மாத்தூர் என்னும் ஊரில் செங்குந்தர் குலத்தில் தோன்றினார். இவருடைய தந்தையார் பெயர் அருணாசல முதலியார். இவர் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றறித்ததோடு, வேதம், உபநிடதம், பதினெண்புராணம், அறுவகைச் சமய நூல்கள் முதலியவைகளை நன்கு ஓதியுணர்ந்தார். இவருக்கு அறிவாசிரியர் சுப்பராய அடிகள் என்னும் பெரியார் ஆவர். இவருடைய வரலாற்றுக் குறிப்புகள், கீழ்வரும் பாவில் வந்துள்ளன.
புண்ட ரீக புரத்தினில் ஒங்கும் தண்டமிழ் வீர சைவ மரபினில் வந்தவ தரித்து மறையாறு சாத்திரம் சந்ததம் பன்னிரு சமய புராணமும் முப்பத் திரண்டு முதலற நூல்களும் அப்படி இரட்டி அருங்கலைக் கியானமும் நித்தியங் காட்டுப நிடதமா வாக்கியம் சிந்தித் தறிவே சிவமெனத் தேர்ந்து என்றனை வலிய இழுத்தாட் கொண்டோன் சமயவா திகளைத் தண்டித்து மற்றவர்க் கமையவே பெருவாழ் வணிக்கும் பெருத்தகை அண்ணமலை யோடு அங்கயற் கண்ணியும் அண்ணாமலையார் அருளால் அமைத்த சுப்பரா யப்பேர் சூட்டிய தேசிகன் தப்பிலாப் பொற்கழல் தாழ்ந்தவன் அடியருள்
இவர் அன்பர்கள் சிலருடைய வேண்டுகோளின்படி அறிவு நூல் ஒன்று இயற்றினார். அது அத்வைத சிந்தாமணி எனவும் ஞான சாரம் எனவுங் கூறப்பெறுகிறது.
நூலைப் பாராட்டிப் பாதூர் சண்முகம் பிள்ளை, புவனகிரி சிவசிதம்பரபாகவதர், மதுரைமாவட்டம் வீரை நல்லழகப்ப பிள்ளை, அதிவீரராமன் பட்டணம் காத்தமுத்து உபாத்தியாயர், முத்துப்பேட்டை பொன்னுச்சாமிப் பிள்ளை, பெருமாத்தூர் அநணாசல செட்டியார், சுத்துகுழி குப்புச்சாமிப் பிள்ளை முதலி யோர் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர்.
"சாத்திரங்கள் படித்தாலும் நதிகள் ஆடித் தலங்கள் தொறும் கைங்கரியம் புரிந்தா லுஞ்சற் பாத்திரதா னங்கள் மிகச் செய்தா லுங்கூ
பந்தடந்தோய் புகன் மலர்க்கா அமைத்திட் டாலும் வீற்றிருந்தோர் இருநான்கு யோகந் தன்னை
மிகமுயன்று செய்தாலும் மேலர முத்தி மாத்திரம்வா ராதுமற்ற தெதுவந் தாலும் மைந்தனே மனமடங்கா வகையால்தானே."
என்பது நூலில் ஒரு பாட்டு. இவர் ஆனந்தக்களிப்பு முதலிய பிற நூல்களும் இயற்றியுள்ளார்.
"அந்தப் பரவெளி கண்டால்-யார்க்கும் அதைவிட வேசுகம் ஆவதொன் றுண்டா சந்ததம் இன்பம் ஊறும்-இது சத்தியம் சத்தியம் தேறும்."
என்பது அந்நூலில் ஒரு கண்ணி.